Wednesday 8th of May 2024 01:38:03 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா தடுப்பூசிக்கான சா்வதேச பொது கூட்டணியில்  இணைந்தது சீனா!

கொரோனா தடுப்பூசிக்கான சா்வதேச பொது கூட்டணியில் இணைந்தது சீனா!


உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைப்புடன் செயற்பட்டுவரும் சர்வதேச கொரோனா தடுப்பூசி கூட்டணியான கோவாக்ஸின் காவி (Global Alliance for Vaccines and Immunization) என்ற அமைப்புடன் சீனா இணைந்துள்ளது.

இதனை சீன வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இன்று வெள்ளிக்கிழமை உறுதி செய்தார்.

அனைவருக்கும் பொதுவான உலகளாவிய சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துவதுடன், கொரோனா தடுப்பூசிகளை சர்வதேச அளவில் பொது உடமை ஆக்குவதற்குமான முயற்சியில் உதவ சீனா எடுத்துள்ள ஒரு முக்கியமான நடவடிக்கை இதுவென சீன வெளியுறவு அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹுவா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அனைத்து நாடுகளிலும் உள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் பொருத்தமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை வளரும் நாடுகளுக்கும் சமமான வகையில் கிடைக்கச் செய்வதில் சீனா தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் சீனாவால் உருவாக்கப்படும் தடுப்பூசிகளை உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நாங்கள் உறுதி கொண்டுள்ளோம். சீனாவின் தடுப்பூசிகள் வளரும் நாடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் ஹுவா கூறியுள்ளார்.

சா்வதேச தடுப்பூசிக் கூட்டணியான கோவாக்ஸுடன் சீனா நெருங்கிய தகவல்தொடர்புகளைப் பேணி வருகிறது. சீனாவின் தடுப்பூசிகள் பல இறுதிக் கட்ட பரிசோதனைகளில் உள்ளன. சா்வதேச ரீதியில் இடம்பெறும் தடுப்பூசி பரிசோதனைகளில் சீனா முன்னணியில் இருந்தாலும் உலகின் பொது நன்மை கருதி நாம் கோவாக்ஸ் கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளோம் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகளின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் உறுதியான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.

மேலும் பல நாடுகளும் கோவாக்ஸில் இணைந்து ஆதரவளிக்கும் என்று நம்புகிறோம் எனவும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கோவாக்ஸ் கூட்டாளர்களுடன் சீனா தொடர்ந்து இணைந்து செயல்படுவதோடு, தொற்று நோயில் இருந்து உலகின் அனைத்து மக்களையும் பாதுகாப்பதுடன், அவா்களின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்ய பாடுபடும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE